தோற்றம்

18 ஆம் நூற்றாண்டில் சென்னை கிண்டி அருகில் உள்ள பிரிங்காச்சலம் என்னும் பழப்பதி பெருஞ்சிறப்பு விளங்கியது. அவ்வூரில் அரங்கையர், குள்ளம்மாள் தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அரங்கையர் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். சாதி சண்டை சமய சண்டைகளை வெறுத்தார். சமரச நோக்கதையே மேற்கொண்டு அதனை எங்கும் பரப்பினார். இவ்வேளையில் 1835 ஆம் ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது சிவ லிங்கம் என்று பெயரிட்டனர்.அவரே பின்னாளில் மகானாக சிறப்புற்றார்.

கல்வி

கல்வி கற்க தொடங்கிய சிவலிங்கனார் மிக விரைவாக பயின்றார். உலக நூல் அறிவு நூல் என்று இரண்டிலும் வல்லவராகி பத்தாண்டில் அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். பதினோராவது ஆண்டு முதல் பதிமூன்று ஆண்டு வரையில் பதினென் சித்தர்கள் பாடிய நூலனைத்தையும் ஆராய்ந்தார்.

இருபது வயதுக்குள் தத்துவவிசாரம் புரிந்து எங்கும் நிறைந்து எல்லாமாய் உள்ள பிரம்மத்தை அறிய பேரவாக் கொண்டு பித்தனைப் போன்றும் பேயினை போன்றும் அலைந்தார். தன்னைவிட கல்வியில் தேர்ச்சி யுடையவர் யாருமில்லை என்று இறுமாப்புடன் இருந்தார்.

ஞான குருவை தேடல்

இந்நிலையில் சுட்டிக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது என்ற பழமொழிக்கேற்ப சிவலிங்கனார் குரு ஒருவரை எண்ணி அவர் மூலமாக எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்று மேலும் நூல்களை பார்க்கத் தொடங்கினார். இந்த வேளையில் “ஒழிவிலொடுக்கம்” எனும் சிறிய நூல் கிடைக்கப் பெற்றார். இந்நூல் சீர்காழி கண்ணுடைய வள்ளலார் இயற்றியது. பெருஞ் சிறப்பு வாய்ந்த இந்நூலை இரவும் பகலும் கண்ணும் கருத்துமாய் இருந்து பன்முகப் பார்வையில் ஆராயலானார். இந்நூலைப் படித்த பிறகு வேறு எந்த நூலிலும் மனம் புகவில்லை. இந்நூலை இயற்றிய கண்ணுடைய வள்ளலார் தம்முடைய ஞான குருவாக உள்ளத்தில் கொண்டார். ஒவ்வொரு நாளும் அவரையே போற்றி வழிபட்டார். இப்பெரியோருடைய திருவருள் கிடைக்கப் பெற்றார். அவ்வள்ளளார் தம்மை ஆட்கொண்ட திருவருட் சிறப்பால் “பூரணாநந்தோதயம்” என்னும் நூலை இயற்றினார். இந்நூலில் தாம் ஆட்கொள்ளப்பட்டதை பதிவிட்டுள்ளார். சீர்காழி கண்ணுடைய வள்ளலாரின் திருவருளைப் பெற்ற பிறகு இவருடைய பெயர் சாங்கு சித்த சிவலிங்க நாயனார் என்று வழங்குவதாயிற்று.

திருமணம்

சிவலிங்க நாயனாருக்கு 20 வயதில் பெற்றோர்கள் வேலாயி என்னும் பெண்ணை 1855 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். நாயனார் அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தமது அலுவலை முன்னிட்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜகந்நாதபுரம் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவருக்கு 1864ஆம் ஆண்டு ஆண் மகன் பிறந்தார். அக்குழந்தைக்கு உமையலிங்கனார் என்று பெயர் சூட்டினார்கள். ரெங்கய்யர் என்று மற்றொரு மகனும் இருந்துள்ளார். உமையலிங்கனார் அண்ணா சாலையில் உள்ள “ஹிக்கின்போதம்ஸ்” நூல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு குப்பம்மாள் என்பவரை திருமணம் செய்வித்தனர்.

பணியாற்றியது

நாயனார் அக்காலத்தில் பென்னி அண்ட் கம்பெனி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த கிளமெண்ட் சிம்சன் என்னும் துரைமகனாரின் வீட்டு அலுவல பணியும் சமையல் பணிகளையும் செய்துவந்தார். பணிபுரியும் அலுவலகத்தில் நாயனார் அவர்கள் உலக நிலையிலிருந்து விடுபட்டு யோக நிலையில் ஆழ்ந்து விடுவார்கள். இவ்வாறு அரிய யோக சக்தியால் பெறற்கரிய வாக்கு வன்மையை பெற்று, வரும் காலங்களில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே உணரும் ஆற்றல் பெற்றிருந்தார்.

சித்தர் நாயனாரின் தவ ஆற்றல்

நாயனார் அவர்கள் எதிர் நிகழும் நிகழ்வுகளை முன் கூட்டியே உணர்ந்த படியால் தான் பணி செய்த அதிகாரி துரைமகனாருக்கு நிகழ இருந்த ஆபத்துகளை தடுத்து ஆட்கொண்டார்.
ஒரு நாள் இரவு துரைமகனார் படுக்கையறைக்கு செல்லும் போது நாயனார் அவர்களை தடுத்து இன்று படுக்கை அறையில் தாங்கள் படுக்கக் கூடாது என்று வற்புறுத்தி கூறினார். அவர் நாயனார் சொல் கேளாமல் படுக்கைக்கு சென்று உறங்கிவிட்டார். நாயனார் உள்ளமோ கலங்கியது. வருவது வரட்டும் என்று துணிந்து நாயனார் தன் கீழ் வேலை பார்க்கும் ஆட்களைக் கொண்டு கட்டிலோடு அறையை விட்டு அப்புறப்படுத்தினார். அவரோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். சில மணி நேரம் கழித்து படுக்கை அறையின் மேல்தளம் பேரிரைச்சலுடன் இடிந்து விழுந்தது. அச்சத்தோடு எழுந்த துரைமகனார் இடிந்து இருந்த கட்டிடத்தை கண்டு பயம் உற்றார். முன்கூட்டியே சொன்ன மகானின் வாக்கு வன்மையை கண்டு வியந்தார்.
லண்டனில் துரைமகனார் மனைவி பிரசவ காலம் நெருங்கிவிட்டது. அவ்வேளையில் பிரசவம் மிகவும் சிக்கலாக உள்ளது என்றும் தாய் அல்லது பிள்ளை யாராவது ஒருவரை மற்றும் காப்பாற்ற முடியும் என்றும் துரைமகனாருக்கு தகவல் வந்தது. இதை அறிந்த துரைமகனார் மிகுந்த கவலைக்கு உள்ளானார். இதை அறிந்த மகான் ஓர் அறைக்குள் சென்று அறைக் கதவை மூடு மாறும் தான் சொல்லும் வரை அறை கதவை திறக்க கூடாது என்றும் கூறிவிட்டு நவகண்ட யோகத்தில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து அறையிலிருந்து வெளி வந்த மகான் பிரசவம் நல்ல படியாக முடிந்தது என்றும் தாயும் சேயும் நலம் என்றும் மிக்க மகிழ்ச்சி மிகுந்த செய்தியை துரைமகனாருக்கு தெரிவித்தார். இது எவ்வாறு சாத்தியம் என்றால் மகான் அவர்கள் அறைக்குள் சென்று கூடுவிட்டு கூடு பாய்ந்து அங்குள்ள வைத்தியரின் உடலுக்குள் சென்று துரைமகனாரின் மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
வேறொரு தருணத்தில் லண்டனில் உள்ள தன் அருமை மகன் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தந்தி மூலம் செய்தி கிடைத்தது. துரைமகனார் அதிர்ச்சி அடைந்து கலக்கமுற்றார். அவர் நிலையைக் கண்ட நாயனார் அவரைத் தேற்றி ஒரு வாரத்திற்குள் உங்கள் மகன் குணம் அடைந்த செய்தி வரும் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். நாயனார் கூறியவாறு மறு தந்தி வரக்கண்ட துரைமகனார் மிக்க மகிழ்ச்சி அடைந்து நாயனாரின் வாக்கு வன்மையை வியந்து உள்ளம் மகிழ்ந்தார்.

பின்னொரு சமயம் துரைமகனாரின் படுக்கை அறையில் பல்லி ஒன்று இருந்தது. அதைக்கண்டு அருவருத்த துரைமகனார் பல்லியை கொன்றுவிடும்படி வேலை ஆட்களுக்கு உத்தரவிட்டார். கருணை உள்ளம் கொண்ட நாயனார் வேலையாட்களை தடுத்து ஒரு வாரத்திற்குள் பார்சல் ஒன்று வரும் அதில் இப்பல்லிக்கு துணையாக பெண் பல்லி வர இருக்கிறது என்று சொன்னார். அனைவரும் அவர் சொல்லை ஆராய எதிர்பார்த்து இருந்தனர். நாயனார் கூற்றுபடி பார்சலும் வந்தது. அன்று துரைமகனார், நாயனார் அவர்களின் சொல்லை சோதிக்க எண்ணி தனது நண்பர்களையும் வரவழைத்து இருந்தார். வேலையாட்களும் ஆர்வமுடன் இருந்தனர். துரைமகனார் வந்த அந்த பார்சலை ஒரு அறையில் வைத்து அனைத்து கதவுகளையும் மூடச் சொன்னார். அப்போது முன்பு கொள்ளாமல் விடப்பட்ட ஆண்பல்லியானது சுவரில் தலையை தூக்கி கொண்டு இருப்பதையும் கவனித்தார். பார்சலை பத்திரமாக பிரித்தபோது அதிலிருந்து ஒரு பல்லியானது குதித்தோடி சுவரில் உள்ள பல்லியுடன் சேர்ந்து கொண்டது. இக்காட்சியைக் கண்ட துரைமகனார் அவரும் அவரது நண்பர்களும், வேலையாட்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
பிறிதொரு நாள் இரவு துரைமகனாருக்கு கடுமையான காய்ச்சல் கண்டது. மருத்துவர்கள் சிகிச்சையும் பலன் தரவில்லை. துரைமகனார் படுத்த படுக்கையானார். மருத்துவ நிபுணர்கள் அவரை குணமாக்க முயன்றார்கள். அவர்கள் முயற்சியும் பலன் தரவில்லை. முடிவாக துரைமகனார் பிழைக்கமாட்டார் என்று கூறிவிட்டார்கள். அப்போது துரைமகனாரின் நண்பர்களும் வேலையாட்களும் நாயனார் யோக சக்தியை உணர்ந்தவர்களும் துரைமகனாரை குணமடைய செய்ய நாயனார் அவர்களைக் கேட்டுக் கொண்டனர். அன்புள்ளம் கொண்ட நாயனார் தியானத்தில் அமர்ந்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். தண்ணீரில் திருநீற்றை கலந்து துரைமகனாரை அருந்தும்படி செய்து அவரை உச்சி முதல் பாதம் வரை உற்று நோக்கி விட்டு சென்றார். மறுநாள் காலையில் துரைமகனாருக்கு நோய் நீங்கப்பெற்று படுக்கையிலிருந்து எழுந்து புத்துணர்ச்சியோடு காணப்பட்டார். துரை மகனாரும் அவரது நண்பர்களும் மற்றவர்களும் நாயனாரின் தெய்வத்தன்மையை வியந்து அவரை சிறந்த மகான் என்று பாராட்டினர்.

சிம்சன் துரை தனக்கு நேர்ந்த பல இடுக்கண்களை முன்னுணர்வால் எடுத்துக் கூறி தன் உயிரை காத்து வந்த நாயனாரின் பேரருளை போற்றினார். துரைமகனாருக்கு அப்போதுதான் நாயனாரின் ஞான அருட்சக்தி நன்கு புலப்பட்டது. நாயனாரிடம் பேரன்பு உடையவராய் தானும் தன் மனைவியும் இரு பக்கத்தில் இருக்க நடுவில் நாயனாரை அமரச்செய்து நிழற்படம் எடுத்துக் கொண்டார். சில சமயங்களில் நாயனார் ஓய்வு நேரங்களில் அலுவலகத்திலேயே யோக நிலையில் ஆழ்ந்து விடுவார். அப்போது இரண்டு அடி உயரத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை பார்த்து அதிசயித்தார். நாயனார் தியானம் வழிபாடு செய்வதற்கு தனி அறையும் கொடுத்து உதவினார் துரைமகனார். நாயனார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உபகாரச் சம்பளம் பெறுவதற்கு ஏற்பாடு செய்தார். நாயனார் அவர்கள் தெய்வ ஞான கல்வியினை தொடர்ந்து மக்களுக்கு வழங்கிடவும் துரைமகனார் அவர்கள் சென்னை கிண்டியில் 22 ஏக்கர் நிலத்தை வாங்கி நாயனார் அவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

இவ்வாறு தன் அன்பை புலப்படுத்திய துரைமகனார் நாயனார் அவர்களின் அறிவுரைகளை கேட்பதில் இன்பம் கொண்டு மகிழ்ந்தார். துரை மகனார் தனது தாய் நாடு செல்ல ஆயுத்தம் ஆன பொழுது நாயனார் அவர்களை அணுகி உங்களது இறுதி காலத்தை நான் எப்படி தெரிந்து கொள்வது என கேட்டார். அப்பொழுது நாயனார் அவர்கள் தம்முடைய நிழற்படத்தை அவரிடம் கொடுத்து இதை தாங்கள் மாளிகையில் தொங்க விடுங்கள் என்று கூறினார். தனது படம் எப்பொழுது கீழே விழுகிறதோ அப்போது தான் உயிர் துறந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

சித்தர் நாயனாரின் தொண்டுகள்

துரைமகனார் வழங்கிய இடத்தில் (தற்போது சமாதி உள்ள இடம்) ஞானசம்பந்தர் பெயரில் மடாலயம் நிறுவினார். அம்மடத்தின் வாயிலாக சொற்பொழிவுகளும் தெய்வ திருநெறி தொண்டுகள் ஆற்றி வந்தார். நாயனார் அவர்கள் தத்துவார்த்தம், பக்தி, சித்து, யோகம் முதலியவற்றை பக்குவமடைந்த உள்ளங்களுக்கு போதித்து வந்தார். நாயனார் அவர்கள் தம்மிடம் வரும் மாணவர்களை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. மாணவர்களிடம் சில செப்புக் காசுகளை வாங்கி அவற்றை பொற்காசுகளாக மாற்றித் தருவார். அவைகளை வாங்கி கொள்ள மறுப்பவர்கள் மாணவர்களாக ஏற்றுக்கொள்வார். இவ்வாறு பல சோதனைகளை செய்த பிறகு தம் மாணவர்களாக ஏற்றுக்கொள்வது நாயனாரின் வழக்கமாக இருந்தது. அவ்வாறு பக்குவம் அடைந்தவர்களுக்கு ஞான நெறிகளை உபதேசித்து வந்தார். இவ்வாறு நாயனார் அவர்கள் ஞான நெறிகளை பரப்பிக் கொண்டு வரும் வேளையில் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்த பெருஞ் செல்வரும் வணிகருமாகிய முனுசாமி என்பவர் நாயனாரின் புகழைக் கேள்விப்பட்டு அவரை நேரில் தரிசித்து தன்னை ஆட்கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். நாயனார் அவர்கள் ஆர்வத்தோடு தன் முன் நிற்கும் முனுசாமி அவர்களை உற்றுநோக்கி ஆகட்டும் என்று கூறி சென்றார். பின்னர் முனுசாமி அவர்களை பல சோதனைகளால் ஆராய்ந்து அவருடைய பக்குவமான மன நிலையை கண்டு மாணவராக ஏற்று ஞான உபதேசம் செய்தார். அத்துடன் அவருக்கு “நிரதிசயானந்தன்” என்னும் தீட்சை நாமம் சூட்டினார். நாயனாரை போலவே நிரதிசயானந்தரும் ஞான மார்க்கத்தை வளர்த்து வந்தார். இவரும் சிறந்த நூல் ஆசிரியராக விளங்கினார். இவ்வாறு நாயனார் அனேக ஞான கல்விகளை வழங்கி “உன்னுள் உத்தமனை காணும் வழி சாகா கல்வி” என தனது திருவாய் மலர்ந்தருளினார்.

சித்தர் நாயனார் ஜீவ சமாதி அடைதல்

நாயனார் அவர்கள் இல்லறத்தவராக தோன்றினாலும் வாழ்வில் பற்றற்றவராக விளங்கினார்கள். தமக்கென எந்த பொருளையும் சேர்த்துக் கொள்ளவில்லை. தான் மாதந்தோறும் பெற்ற ஊதியத்தையும் ஏழை எளியவருக்கு கொடுத்து உதவுகின்ற பரந்த தியாக உள்ளம் கொண்டவராக இருந்தார். இத்தகைய அருள் குணமும் ஞானமும் கொண்ட நாயனார் அவர்கள் தாம் சமாதி அடையும் காலத்தை முன்கூட்டியே மாணவர்களுக்கு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்தபடியே தமிழ் சார்வாரி ஆண்டு ஆனி மாதம் 29ஆம் நாள் (12.7.1900) மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதி வியாழன் அன்று சென்னை கிண்டியில் துரைமகனார் அளித்த இடத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

சித்தர் நாயனார் ஜீவசமாதியும் வழிபாட்டு முறைகளும்

நாயனார் அவர்களின் சமாதி மக்கள் வழிபடும் தெய்வ ஆலயமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து நாயனாரின் சமாதியில் வழிபட்டு செல்கிறார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 120 ஆம் ஆண்டு குருபூஜை சிறப்பாக நடந்தேறியது. நாயனாரின் சமாதி ஆலயத்தில் வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் சிறப்பு பூஜை, பிரதோஷ பூஜையை, அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மேற்படி பூஜை நடைபெறும் தினங்களில் சிறப்பு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

ஜீவசமாதி ஆலயத்தின் தற்போதைய நிலை

துரை மகனார் அளித்த 22 ஏக்கர் நிலத்தில் தற்பொழுது 1,200 சதுர அடி நிலத்தில் தான் நாயனாரின் அறிவுத்திருக்கோயிலான சமாதி ஆலயம் உள்ளது. மீதி இடங்கள் மக்கள் ஆக்கிரமிப்பில் சென்று விட்டது. நாயனார் முன்பு நடத்திய ஞான கல்வி வகுப்புகளை போல் தற்பொழுது இக்கோவில் வளாகத்தில் பிரதி வியாழன் மாலை 6 மணிக்கு ஞானம், யோகம், மருத்துவம், இயற்கை உணவு பற்றிய போதனைகள் தேர்ச்சி பெற்ற குருமார்கள் பயிற்றுவிக்கிறார்கள்.நாயனார் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நீரும் திருநீரும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது அனைவருக்கும் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. தீராத பெரிய நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இது அனுபவப்பூர்வமான சத்தியமான உண்மை

தகவல்

மகான் சாங்குசித்த சிவலிங்க நாயனார்

சமூக ஊடகங்கள்

வரைபடம்